NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News

உறங்குவது போலும் சாக்காடு! - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

photodune-2043745-college-student-s

அறிவியலுக்கு அப்பால் -12 1977 முதல் பல ஆண்டுகள், லண்டனிலுள்ள பி.பி.சி. தொலைக்காட்சி எவ்ரிமேன் (Every man) என்னும் தொடரை ஒளிபரப்பியது. அதில் 1980 இல் வெளிவந்த ஒரு நிகழ்ச்சியில் துர்தனா (Durdana) என்னும் ஒரு 12 வயதுப் பெண் தோன்றினாள். அந்த பெண் தனது 2 ஆம் வயதில் மிகுந்த நோயுற்றபோது சுமார் 15 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாகக் கருதப்பட்டதாகவும், ஆனால் திடீரென்று மீண்டும் உயிர் பெற்றதாகவும் தனக்கு அப்போது நேர்ந்த அனுபவங்களை நேயர்களிடம் பகிர்ந்து கொண்டாள். துர்தனாவின் தந்தை எ.ஜி.கான் இந்திய இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர். துர்தனா கான் அவர்களின் இளைய மகள். 1968 இல் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஓர் இராணுவ மருத்துவமனையில் கான் அவர்கள் பணிபுரிந்தபோது துர்தனா 2 வயதுக் குழந்தை. அப்போது கடுமையான மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, துர்தனாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. திடீரென்று ஒரு நாள் கான் அவர்கள் மருத்துவமனையில் இருந்த போது அந்த மருத்துவமனை வளாகத்தின் பின் பகுதியில் அமைந்திருந்த தனது இல்லத்திருந்து தனது மனைவியின் கதறல் கேட்டு அங்கு விரைந்தார். தொட்டிலில் போடப்பட்டு இருந்த தன் குழந்தை துர்தனாவை கான் பரிசோதித்த போது அந்த உடம்பில் உயிர் இல்லை. ஆனாலும், இராணுவ விதிகளின்படி ஒரு சில சடங்குகளை கான் அவர்கள் செய்ய வேண்டி இருந்ததால், அவர் அலுவலகத்திற்கு சென்று அதற்குத் தேவையான உபகரணங்களை எடுத்து வரப் போனார். அதற்குள் அவரது மனைவி துர்தனாவின் உயிரற்ற உடலை கான் அவர்களின் படுக்கையில் கொண்டு வந்து போட்டு அந்தக் குழந்தையின் வாயில் ஒரு மருந்தை ஊற்றினாள். ஆனால், அது உள்ளே போகாமல் குழந்தையின் கன்னங்கள் வழியாக வழிந்தோடியது. அதற்குள் அங்குத் திரும்பிய கான் அவர்கள், தான் கொண்டு வந்திருந்த அவசர சிகிச்சை உபகரணங்களால் தான் செய்ய வேண்டிய கடமைகளை அந்த உயிரற்ற உடலின் மீது செய்து முடித்தார். அப்படிச் செய்யும் போதே ஏதோ ஓர் உந்துதலின் பேரில் ""திரும்பி வந்துவிடு குழந்தாய், திரும்பி வந்துவிடு'' என்று திரும்பத் திரும்பக் கூறினார். அதன் பின்னர் சோர்ந்து போய் தனது குழந்தையின் அருகில் கான் உட்கார்ந்த பொழுது திடீரென்று குழந்தையின் உடலில் ஓர் அசைவு ஏற்பட்டு குழந்தை கண்களை மெல்லத் திறந்தது. வாய் கசக்கிறது என்று சொல்லிவிட்டுக் குழந்தை மீண்டும் கண்களை மூடிக்கொண்டது. ஒரு புறம் மகிழ்ச்சியும், இன்னொரு புறம் அதிர்ச்சியும் அவரை ஆக்கிரமிக்க கான் அவர்கள் மறுபடியும் குழந்தையை மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் எல்லா உறுப்புக்களும் செயல்படத் தொடங்கி 15 நிமிடங்கள் இறப்பிற்குப் பின் அல்லது இறப்பை ஒத்த ஓர் உடல் நிலைக்குப்பின், துர்தனா மீண்டும் உயிர் பெற்றாள். இது நடந்த ஓரிரு நாட்களுக்குப் பின் துர்தனாவின் தாய் அந்தக் குழந்தையை வேடிக்கையாகக் கேட்டாள், ""கண்மணி அன்று ஒரு நாள் திடீரென்று நீ எங்கே போய்விட்டாய்?'' என்று. உடனே துர்தனா பதில் சொன்னாள், ""வெகு தூரத்தில் நட்சத்திரங்களைத் தாண்டிப் போனேன்'' என்று. ""அங்கு நீ என்ன பார்த்தாய்?'' என்று தாயார் கேட்டவுடன், அந்த இடத்தில் ஆப்பிள்களும், திராட்சைகளும், மாதுளம் பழங்களும் குலுங்கி நிற்கும் மரங்களைக் கொண்ட தோட்டங்களையும், அற்புதமான நீரோடைகளையும் பார்த்தாகவும், தனது பாட்டனாரையும், பாட்டனாரின் தாயையும், தனது தாயைப் போலத் தோற்றமளித்த இன்னொரு பெண்ணையும் அங்குப் பார்த்ததாகவும் துர்தனா பதிலளித்தாள். தனது பாட்டனாரின் தாய் தன்னை மடியில் அமர்த்தி முத்தமிட்டதாகவும், அந்த நேரத்தில்தான் தனது தந்தை "திரும்பி வந்துவிடு குழந்தாய்,திரும்பி வந்துவிடு' என்று அழைத்த குரல் கேட்டதாகவும் துர்தனா கூறினாள். தன்னுடைய அப்பா அழைக்கிறார், எனவே தான் போகவேண்டும் என்று துர்தனா கூறிய போது அவளை அவளுடைய பாட்டனார் கடவுளிடம் அழைத்துப் போனதாகவும், கடவுளின் அனுமதியோடு தான் அப்பாவின் படுக்கைக்குத் திரும்பியதாகவும் துர்தனா கூறினாள். ஒரு மருத்துவராகிய கான் அவர்களை வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் தன்னுடைய தந்தையின் படுக்கைக்குத் தான் திரும்பியதாக துர்தனா கூறியது தான். காரணம், துர்தனா உயிரற்ற சடலமாக இருந்தபோதும், அந்த உடலுக்கு உயிர் மீண்டும் மெல்லத் திரும்பிய போதும் மட்டும் தான் துர்தனா தன்னுடைய தந்தையின் படுக்கையில் இருந்தாள். அதற்கு முன்னரோ, அவளுக்கு நினைவு திரும்பிய பின்னரோ அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையின் படுக்கையில் படுத்ததே இல்லை. எனவே, கான் அவர்களுக்கு, துர்தனாவின் இந்தக் கூற்று புரியாத புதிராகவே இருந்தது. ஆனால், இதற்குப் பின்னால் நடந்த ஒரு சில நிகழ்வுகள் அந்தப் புதிரை இன்னும் பெரிதுபடுத்திவிட்டன. மேற்கூறிய சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு கான் அவர்கள் கராச்சியில் உள்ள ஜின்னா முதுகலை மருத்துவ மையத்திலுள்ள மூளை நரம்பியல் துறைக்குத் துர்தனாவை அழைத்துப் போனார். அங்கு ஒரு பெரும் அறுவை சிகிச்சை துர்தனாவின் தலையில் செய்யப்பட்டது. அதன்பின் ஒருநாள் கான் அவர்களின் மனைவியும், துர்தனாவும் கராச்சியிலுள்ள கான் அவர்களின் மாமா வீட்டிற்குச் சென்றார்கள். அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஒரு பழைய புகைப்படத்தைப் பார்த்து விட்டு துர்தனா துள்ளிக் குதித்தாள். ""அம்மா, ஒரு நாள் நான் நட்சத்திரங்களுக்குப் போன போது சந்தித்த, என்னை மடியிலே வைத்து முத்தமிட்டுக் கொஞ்சிய எனது பாட்டனாரின் தாய் இது தான்'' என்று அந்தப் புகைப்படத்திலிருந்த ஒரு பெண்மணியை துர்தனா சுட்டிக் காட்டினாள். கான் அவர்களின் மாமா அதை உறுதி செய்தார். துர்தனாவின் தாய் அந்தப் புகைப்படத்தை அதுவரை பார்த்ததுமில்லை, கான் அவர்களின் பாட்டி எப்படி இருப்பாள் என்பதும் துர்தனாவின் தாயாருக்குத் தெரியாது. கான் அவர்களின் பாட்டியின் (துர்தனாவின் பாட்டனாரின் அம்மா) புகைப்படம் கராச்சியிலுள்ள அந்த வீட்டில் மட்டும் தான் இருந்த காரணத்தால் கான் மற்றும் அவரது மாமா ஆகியோரைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் அந்தப் புகைப்படத்தைப் பற்றியோ, கான் அவர்களின் பாட்டியின் உருவ அமைப்பைப் பற்றியோ எதுவுமே தெரியாது. அப்படியானால், துர்தனாவால் அந்தப் புகைப்படத்திலுள்ள தனது பாட்டனாரின் அம்மாவுடைய புகைப்படத்தை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது? பி.பி.சி. தொலைக்காட்சியில் துர்தனா தோன்றி தனது அனுபவத்தை நேயர்களோடு பகிர்ந்து கொண்ட பின் அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளராகிய ஏஞ்சலா டில்பி (Anjela Tilby) என்பவர் துர்தனாவின் ஓவியத் திறமையைப் பார்த்துவிட்டு, அவள் இறப்பிற்குப் பின் கண்ட காட்சிகளை ஓவியமாக வரையுமாறு கேட்டுக் கொண்டார். துர்தனாவும் தான் நட்சத்திரங்களுக்கு இடையில் கண்ட காட்சிகளை ஓவியங்களாக வடித்தார். அந்த ஓவியங்களோடு பெப்புல் மில் அட் ஒன் (Pebble Mill at One) என்னும் பி.பி.சி. தொடரில் துர்தனா தோன்றிய போது, அந்த பி.பி.சி நிகழ்ச்சியைப் பார்த்த ஜெர்மானிய யூதப் பெண்மணியாகிய திருமதி கோல்ட்ஸ்மித் (Mrs.Goldsmith) என்பவர் துர்தனாவின் இல்லத்திற்கு வந்து தானும் துர்தனாவைப் போல் இறப்பிலிருந்து மீண்டு வந்ததாகவும், தான் இறப்பிற்குப் பின்னால் கண்ட காட்சிகள் துர்தனா வடித்த ஓவியங்களில் கண்ட காட்சிகளைப் போல் இருந்தன என்றும் கூறினாள். துர்தனா உண்மையில் இறந்தாளா? இறப்பிற்குப் பின் அவள் உண்மையிலேயே மீண்டு வந்தாளா அல்லது அவை அனைத்தும் துர்தனாவின் முளைக்குள் ஏற்பட்ட இரசாயனக் கலவைகளின் விளைவாக அவளுக்குத் தோன்றிய கற்பனைகளா? ஒரு வேளை மூளை என்னும் விசித்திரமான இயந்திரத்தில் நடைபெற்ற இரசாயன மாற்றங்களால் துர்தனாவுக்குச் சில கற்பனைகள் ஏற்பட்டன என்பது உண்மையானாலும், அவள் உயிர் மீண்டு வந்தபோது தன் தந்தையின் படுக்கைக்குத் திரும்பியதாக கூறியது எப்படிச் சாத்தியம்? அதை விட அதுவரை அவள் பார்த்திராத ஒரு புகைப்படத்தில் தனக்குத் தெரியாத தன்னுடைய பாட்டனாரின் தாயை அவள் சரியாக அடையாளம் கண்டு கொண்டது எவ்விதம்?