NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News

அளவோடு பேசுவோம்

photodune-2043745-college-student-s

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வசதியானவர்கள் வீடுகளிலும், வியாபாரத் தொடர்புக்காகவும், அவசரத் தகவல் தருவதற்கும், தரைவழித் தொலைபேசியைப் பயன்படுத்தி வந்தனர். சிலர் அவசரத் தகவல் என்றால் அஞ்சலகங்களில் இருந்த தரைவழித் தொலைபேசியில் உரிய கட்டணம் செலுத்திப் பேசிவிட்டு வந்தனர். படிப்படியாக தரைவழித்தொலைபேசித் தொடர்பில் பல தனியார் நிறுவனங்களும் பங்கேற்றுக் கவர்ச்சித்திட்டங்களை அறிவித்துத் தரைவழித் தொடர்புகள் அதிகரித்தன. எஸ்.டி.டி. பூத்துகள், பெட்டியில் காசு போட்டுப் பேசும் முறை என அறிமுகம் செய்யப்பட்டு சாமானியர்களும் அதனைப் பயன்படுத்தி வந்தனர். தரைவழித் தொலைபேசி தனிமனிதனைத் தன்வசப்படுத்தவில்லை. இரண்டாயிரமாம் ஆண்டிற்குப்பிறகு செல்லிடப்பேசி மத்திய அரசின் மூலமும், பல தனியார் நிறுவனங்களின் மூலமும் அறிமுகமாகிப் பல கவர்ச்சித்திட்டங்களை அறிவித்ததால் அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறுகிய காலத்திலேயே அதிகரித்தது. இன்றைக்கு இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விதவிதமான செல்லிடப்பேசிகள், தொடுதிரைக் செல்லிடப்பேசிகள். இணையதள இணைப்புடன் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் என மக்களை ஈர்த்து அதனுடன்தான் வாழ்க்கை என்றாகி விட்டது. குறிப்பாக இளைஞர்கள், இணையதளத்தைப் பயன்படுத்தத் தெரிந்தோரில் ஒரு பகுதியினர் குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, மக்கள், உறவினரிடம் அன்புடன் பேசுவதையும், கலந்துரையாடுவதையும் மறந்து செல்லிடப்பேசியுடன் மட்டுமே உறவைப் பலப்படுத்தி பலவீனப்படுகின்றனர். வீட்டிற்கு விருந்தினர்கள், நண்பர்கள் வந்தால் அவர்களை உபசரிப்பதுகூட இயந்திரத்தனமாகி சில நிமிடங்களிலேயே செல்லிடப்பேசியுடன் கலந்து விடுகின்றனர். நாம் சாப்பிடும் நேரம் என்பது மிகக் குறைவான நேரமே. அந்தக் குறுகிய உணவு நேரத்திலும் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே உண்பதென்பது பரிதாபத்திற்குரிய செயலே. அந்த நேரத்திலாவது அதை அணைத்துவிடலாம்.