NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


காஷ்மீர் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம்: மாநிலங்களவையில் ஜேட்லி சாடல்

photodune-2043745-college-student-s

காஷ்மீரில் புர்ஹான் வானி என்கவுன்டருக்குப் பிறகு நடந்த கடுமையான வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்று மத்திய நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜேட்லி சாடினார். காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, மிகையான அடக்குமுறைக்கு பொறுப்பு யார் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அருண் ஜேட்லி கூறியதாவது: "பாஜக-மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சியேற்றதன் காரணமாகவே காஷ்மீரில் வன்முறைகள் வெடிக்கிறது என்று நினைப்பது அரசியல் தவிர வேறில்லை. வேறுபாடுகளை மறந்து நாட்டுக்காக நாம் ஒன்றிணைந்து செயல்படும் காலங்களில் இதுவும் ஒன்று. காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கும் அரசுக்குமான போராட்டமே நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளே பாஜக-பிடிபி கூட்டணியை உருவாக்கியது. பிரிவினைவாதிகளை முறியடிக்க காஷ்மீர் மைய நீரோட்டக் கட்சிகளுடன் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவது அவசியம். காஷ்மீர் கலவரங்களுக்கு காரணம் கூட்டணி ஆட்சியோ, அல்லது டிவி விவாதங்களோ அல்ல, காஷ்மீர் இந்திய நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்ற கருத்துடன் பாகிஸ்தான் ஒத்துப் போகாததே முக்கியக் காரணம். பாரம்பரிய போர் முறைகள் மூலம் இந்தியாவை வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த பாகிஸ்தான், தற்போது பிரிவினைவாதம் தீவிரவாதம் மூலம் சண்டையை செய்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான பெரும் வேட்கை இன்று உச்சம் பெற்றுள்ளது. அதனால்தான் பிரிவினைவாதிகள் தங்கள் உத்திகளை, தந்திரோபாயங்களை மாற்றியுள்ளனர். பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குதல் வன்முறைகளை ஒத்துழையாமை இயக்கம் என்பதாக சமீபகாலங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சமீபத்திய எழுச்சி இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது. கொல்லப்படும் பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களில் நாயக அந்தஸ்து பெறுகின்றனர். ஆனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் ராணுவத்துக்கும் போலீஸுக்கும் எதிராக திரும்பியிருக்கும் போது இவர்கள் நடவடிக்கை எடுத்தேயாக வேண்டியுள்ளது. தாக்குதலை எதிர்கொள்ளும் போலீஸ் மற்றும் ராணுவமே எந்த அளவுக்கு பலவந்தமான நடவடிக்கையை பிரயோகிக்கலாம் என்பதை தீர்மானிக்கின்றனர். எனவே பாதுகாப்புப் படையினர் தேவையான அளவுக்கே பலவந்த நடவடிக்கையை பிரயோகப்படுத்த வேண்டும். எனவே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமானால் எந்தவித ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஒருமனதாக முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார் ஜேட்லி. மருத்துவர்களை அனுப்புக: சீதாராம் யெச்சூரி கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் யெச்சூரி, "நிறைய படைகளை அனுப்புகிறோமே தவிர அங்கு தேவைப்படுவது மருத்துவர்களும் மருத்துவக் குழுக்களுமே என்பதை நாம் உணரவில்லை. பாகிஸ்தானை குறைகூறிக்கொண்டேயிருப்பதில் பயனில்லை. அரசின் பொறுப்பு என்ன? நம்பிக்கையின்மையின் வேர் என்னவென்பதை ஆராயாமல் பாகிஸ்தானை குற்றம்சாட்டி ஒருவித பயனும் இல்லை. எனவே காஷ்மீரில் மேலதிக அடக்குமுறையைக் கட்டவிழ்த்தது யார் என்பது குறித்த விசாரணை தேவை என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு கூறினார் யெச்சூரி.